ஜோதிட ரீதியாக அவரவரின் ஜென்ம லக்னத்திற்கு 7ம் பாவமானது களத்திர ஸ்தானமாகும். நவக்கிரகங்களின் சுக்கிரன் களத்திர காரகன் என்றாலும், பெண்களுக்கு செவ்வாயையும் களத்திர காரகனாக கூறுவார்கள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடும், செவ்வாய் சுக்கிரனும் பலமாக அமைந்து கிரகச் சேர்க்கையின்றி சுபபார்வையுடன் இருந்தால் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் சுபக்கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் அமையப் பெற்றோ, 7ம் வீட்டு அதிபதியாக இருந்தோ, 7ம் வீட்டையும், 7ம் அதிபதியும் குரு பகவான் பார்வை செய்தோ அமையப் பெற்ற ஜாதகிக்கு திருமணம் என்பது இளமையிலேயே நடைபெறக்கூடிய யோகம் உண்டாகும். 7ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானத்தில் குரு பார்வையுடன் அமையப் பெற்று, பருவ வயதில் பாவக்கிரகங்களின் தசாவோ, புக்தியோ நடக்காமல், சுபக்கிரகங்களின் தசாபுக்தி நடைபெற்றால் இளம் வயதிலேயே திருமணம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.
ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் சூரியன், செவ்வாய் போன்ற பாவிகள் இருந்தாலும், 7ம் வீடு சனியின் வீடாக இருந்தாலும், சுபர் பார்வை 7ம் வீட்டிற்கும், 7ம் அதிபதிக்கும் இருந்தால் மத்திம வயதில் திருமணம் நடைபெறும்.
சனிபகவான் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீட்டையும், 7ம் அதிபதியையோ, சுக்கிரனையோ பார்வை செய்தால் திருமணம் தாமதமாக நடைபெறும். பொதுவாக, சனியானவர் 7ல் இருந்தாலும், குடும்ப ஸ்தானமான 2ல் இருந்தாலும் திருமணம் அமைய தடை தாமதம் ஏற்படுகிறது. அது போல சர்ப கிரகங்களான ராகு, கேது 7ல் இருந்தாலும் திருமணம் நடைபெற கால தாமதம் ஏற்படுகிறது. திருமண வயதில் சர்ப கிரகங்களின் தசாவோ, புக்தியோ நடைபெற்றாலும் திருமணம் நடைபெற தாமதம் ஏற்படும்.
நவக்கிரகங்களில் நவநாயகனாக விளங்குபவர் சூரியனாவார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் 7ம் வீட்டில் அமையப் பெற்றால், வரக்கூடியவர் முன்கோபக்காரராகவும், நெஞ்சழுத்தம் உள்ளவராகவும், இரக்கக்குணம் இல்லாதவராகவும் இருப்பார். இவரை அனுசரித்துச் செல்வது என்பது சற்று கடினமான காரியமே.
7ம் வீட்டில் வளர்பிறை சந்திரன் இருந்தால் அமைகின்ற கணவர் அழகானவராகவும், தேய் சந்திரன் இருந்தால் வசதி வாய்ப்பில் சற்று குறைந்தவராகவும், குழப்பவாதியாகவும் இருப்பார்.
7ம் வீடு செவ்வாயின் வீடாக இருந்தாலும், 7ம் வீட்டில் செவ்வாய் அமைந்திருந்தாலும் முன் கோபம் கொண்டவராகவும், அதிகார குணம் உடையவராகவும் இருப்பார்.
7ம் வீட்டில் புதன் அமைந்திருந்தாலும், 7ம் வீடு புதனின் வீடாக இருந்தாலும், கணவர் நல்ல அறிவாளியாகவும் வியாபார நோக்கம் உடையவராகவும் இருப்பார்.
பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடு குருவின் வீடாக இருந்தாலும் 7ம் வீட்டில் குரு அமைந்திருந்தாலும் கணவர் நல்ல வசதி வாய்ப்புடையவராகவும், பெயர் புகழ் பெற்றவராகவும், எல்லோரையும் அனுசரித்துச் செல்பவராகவும் இருப்பார்.
7ல் சுக்கிரன் இருந்தாலும் 7ம் வீடு சுக்கிரனின் வீடாக இருந்தாலும் நல்ல செல்வம் செல்வாக்குடன், நல்ல உடலமைப்பு, சர்வலட்சணம் பொருத்திய உடலமைப்பு, சுகபோக வாழ்க்கை வாழும் யோகம், கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் உடையவராகவும் இருப்பார்.
7ல் சனி இருந்தாலும் 7ம் வீடு சனியின் வீடாக இருந்தாலும், கறுப்பு நிறமுடையவராகவும், இளைத்த தேகம் கொண்டவராகவும், உரத்த குரலில் பேசுபவராகவும் இருப்பார்.
7ல் சர்ப கிரகங்களான ராகு, கேது அமைந்திருந்தால் கணவர் நல்ல நடத்தை உள்ளவராக இருக்கமாட்டார். குறிப்பாக 7ல் சூரியன், ராகு இருந்தால், பல பெண்களின் தொடர்பும் அதன் மூலம் எல்லாவற்றையும் இழக்கக்கூடிய நிலையும் உண்டாகும்.
சப்தமத்தின் பலன்கேளூ மணமதாகும் தகுமடந்தை புதல்வர்க்குச் சான்றுமின்பம் சித்தமுள வுபகார மனஞ்சுற்றத்தார் அபிமானமரசரது சேர்சன்மானம் தத்துகயல் விழிமாது சேர்க்கைநன்றாய் சதிருடனே தான் வந்து சேருமென்று கொத்தாக நீயறிந்து கூறுவாயேல் குறிதப்பா பலன் வந்து கூடுமன்றே. சப்தமஸ்தானம் என்னும் ஏழாம் இடத்தினால் ஏற்படும் பலன்களாவன: மணம் நிகழ்தலும் நல்ல மனைவியும், புதல்வர்கள் வாய்த்தலும் அவர்களால் இன்பம் வாய்த்தலும் சுற்றத்தார் உறவு அதிகமாதலும் அவர்களது அபிமானம் நேருதலும் அரச சன்மானம் வாய்த்தலும் போகஸ்திரீகள் வாய்த்தலும் நிஷ்களங்கமின்றி வந்து சேரும்மென்று ஆராந்து அறிந்து கூறின் புலிப்பாணி குருவருளால் குறித்துச் சொன்ன குறி தப்பாது. [எ-று]
காதல் திருமணத்தில் மதம், இனம் மொழி அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து விடுவதால் இதில் ஏற்றத்தாழ்விற்கோ, பிரிவினைக்கோ இடம் இருக்காது. இப்படி காதலித்தவரையே கைபிடிக்கும் யோகம் யாருக்கு உண்டாகும். என பார்க்கும் போது ஜாதக ரீதியாக 5,7 க்கு அதிபதிகள் இணைந்தோ, பரிவர்த்தனைப் பெற்றோ இருந்து உடன் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் இருந்தாலும், 5,7ல் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தாலும், 7ம் அதிபதியும், சுக்கிரன் செவ்வாயும் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சனி, ராகு, கேது சேர்க்கை பெற்றோ, சாரம் பெற்றோ இருந்தாலும், பருவ வயதில் மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றால் காதல் திருமணம், கலப்பு திருமணம் நடைபெறம்.
பொதுவாக செவ்வாயும் சுக்கிரனும், 7ம் அதிபதியும் சர்பகிரக நட்சத்திரங்களான அஸ்வினி, திருவாதிரை, மகம், சுவாதி, மூலம், சதயம் போன்றவற்றில் அமையப் பெற்றால் அந்நியத்தில் திருமணம் நடைபெறும்.
சொந்தத்திற்குள்ளேயே திருமணம் அமையக்கூடிய வாய்ப்பு யாருக்கு அமையும் என பார்க்கும் போது 5,9 ம் வீடுகளில் சுபகிரகங்கள் அமையப் பெற்று 7ம் வீட்டில் புதன் பகவான் சுப சாரம் பெற்று வலுவாக அமையப்பெற்றால் 7ம் அதிபதி புதனாக இருந்தாலும் உண்டாகும்.
7ல் சூரியன் வலுவாக அமையப் பெற்று சுபசாரத்துடன் குரு போன்ற சுப கிரகப் பார்வைப் பெற்றிருந்தால், தந்தை வழி உறவில் திருமணம் நடைபெறும்.
7ம் வீட்டில் வளர்பிறை சந்திரன் பலமாக இருந்தோ, 7ம் அதிபதியாகி பலம் பெற்றோ சுப பார்வையுடனிருந்தால் தாய் வழியில் திருமணம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொதுவாக 5,9 ம் பாவங்கள் பாதிக்கப்படாமல் இருந்து, 7ல் சுப கிரகங்கள் அமைகின்றபோது சொந்தத்திலோ, தூரத்து சொந்தத்திலோ மண வாழ்க்கை உண்டாகும். ஒரு சில பாவக்கிரகங்கள் 7ல் அமைந்திருந்தாலும், 7ம் வீட்டிற்கு சுபபார்வை இருந்தால் பருவ வயதில் வலுப்பெற்ற சுபகிரகங்களின் தசாவோ, புக்தியோ நடைபெற்றால் ஜாதகி பிறந்த ஜாதியிலேயே தூரத்து சொந்தத்தில் திருமணம் நடைபெறும்.
ஒரு ஆண் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஒரு பெண்ணின் ஜாதக ரீதியாக மாங்கல்ய ஸ்தானம் பலம் பெற்றிருக்க வேண்டும். 8ம் பாவம் பலமாக அமைந்து விட்டால் ஆணுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகும். அதனால்தான் திருமண பொருத்தங்கள் பார்க்கும் போது மாங்கல்ய பாக்கியம் பலமாக உள்ளதா என ஆராய்ந்த பிறகே ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு களத்திர ஸ்தானமான 7ம் இடம் எப்படி பலமாக இருக்க வேண்டுமோ அது போல 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானமும் பலமாக இருத்தல் வேண்டும். 8ம் வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 8ம் வீட்டை குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் கணவருக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் உண்டாகி பெண்ணுக்கு நீண்ட சுமங்கலி யோகம் உண்டாகிறது.
தோஷமுள்ள ஜாதகம் என பார்க்கின்றபோது 7,8 ம் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது அமையப் பெற்று சுபபார்வையின்றி இருந்தாலும் 7,8 ம் அதிபதிகள் மேற்கூறிய கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், மாங்கல்ய தோஷம் உண்டாகி கணவருக்கு கண்டத்தை ஏற்படுத்துகின்றது.
7,8 ம் அதிபதிகள் நீசம் பெற்றிருந்தாலும், நீசம் பங்கம் பெற்றிருந்தால் முதல் வாழ்க்கை தவறினாலும் இரண்டாவதாக ஒரு வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 7, 8ம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் அமைவதும் 7,8 ம் அதிபதிகள் அமைந்த வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் இருப்பதும் மாங்கல்ய தோஷமாகும். அது போல மாங்கல்ய ஸ்தானமான 8ம் வீட்டிற்கு சமசப்தமஸ்தானமான 2ல் பாவிகள் அமைவதும் மாங்கல்ய தோஷமாகும். களத்திரகாரகன் என வர்ணிக்கக்கூடிய செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் சனி, ராகு போன்ற பவ கிரக சேர்க்கைப் பெற்றிருப்பதும் 8ம் வீட்டை சனி, செவ்வாய் ஆகிய பாவகிரகங்கள் பார்வை செய்வதும் மாங்கல்ய தோஷமாகும்.
எனவே ஆண்களின் ஆயுளை அதிகரிக்க கூடிய பலம் பெண்களின் ஜாதகத்திற்கு உள்ளதால் 7,8 ம் பாவங்களை நன்கு ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது. இதனால் பெண்களுக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen