கூறப்பா கடகத்தில் செனித்த பேர்க்கு
கொடுமைபலன் தந்திடுவார் சுக்கிராச்சாரி
வாரப்பா வரம் பெற்ற இந்திரசித்து
வகைமடிப்பாய் மாண்டானே வெள்ளியாலே
சீரப்பா திரிகோணம் மறிந்துநிற்க
சிவ சிவா செம்பொன்னும் ரதங்களுண்டு
கூறப்பா மற்றவிடம் கூடாதப்பா
கொற்றவனே நிலைசமயம் கூர்ந்துபாரே
கடக லக்கினத்தில் ஜனித்த ஜாதகருக்கு, வெள்ளி என விளம்பும் சுக்கிராச்சாரியார்` மிகுதியான தீயபலன்களைத்தருவார். எவ்வாறெனில் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற இராவணன் மகனாகிய இந்திரசித்தும் இக்சுக்ராசாரியினால் வகைதொகையாய் மாண்டதையும் அறிவாயன்றோ? ஆயினும் இச்சுக்கிரன் இவர்களுக்குத் திரிகோண ஸ்தானங்களில் நின்றால் சிவபரம்பொருளின் பேரருளினால் பெருந்தனம் வாய்க்கும். மற்றும் ரதம் முதலிய வாகன யோகமும் உண்டு. ஏனைய இடங்களில் இருப்பின் ஆகாது.
இப்படிப்பட்ட ஜாதகரின் கிரக நிலை, திசாபுத்தி ஆகியனவற்றை நன்கு ஆராய்ந்தறிந்து பலன் கூறுவதே சிறப்புடையது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen