Sonntag, 4. Mai 2014

12th lord 2th lord in 7 house

வீரப்பா யின்னமொரு வினையைக்கேளு விரையாதி குடும்பியுமோ ரேழில் நிற்க சீரப்பா ஜென்மனும் வேடதாரி சிவசிவா பாடகனாம் செய்யுளுள்ளோன் கூரப்பா குமரியினால் லாபமுண்டு கொற்றவனே செப்படி வித்தைகளும் செய்வன் ஆரப்பா அரவத்தைப் பிடித்துவந்து ஆட்டிவைப்பன் அனைவோரும் பார்க்கத்தனே வீரமிக்க மறவனே! இன்னுமொரு சேதியினையும் நீ விநயமுடன் கேட்பாயாக! 12-க்குடையவனும் 2க்குடையவனும் 7ஆம் இடத்தில் நிற்க, இச்சென்மன் சீருடையவன் என்றும், பாடகன் என்றும், செய்யுள் இயற்ற வல்லவன் என்றும், பெண்களால் லாபமடைபவன் என்றும், அரசனைப்போல் அலங்காரப் பிரியனென்றும் செப்படி வித்தையில் தேர்ந்தவன் என்றும். எல்லாரும் காணும் படியாக அரவுதனை ஆட்டிவைத்துக் காணச் செய்பவன் என்பதையும் போகர் அருளாலே புலிப்பாணி கூறினேன்.

From Moon 4th house & Venus

பாரப்பா யின்னமொரு புதுமைகேளு பால்மதிக்கு நாலோனும் சுங்கன் கூடில் கூரப்பா யெத்தடத்தில் கூடிட்டாலும், கொற்றவனே ஜென்மனுமோ மந்திரவாதி வீரப்பா வராகிதுர்க்கை தேவி அம்மன் விதமான பூசைதனை மண்ணோர் போற்ற சீரப்பா போகருட கடாட்சத்தாலே செப்பினேன் புலிப்பாணி செயலைத்தானே. நன்றாகக் கூர்மையாக இக்கருத்தையும் மனத்துள் கொள்க! இது புதுமையானதொன்றேயாகும். சந்திரன் நின்ற இடத்திற்கு நாலாம் இடத்திற்குரியவனும் சுக்கிரனும் கூடினால் அதாவது எவ்விடத்தில் கூடினாலும் அச்சென்மனை நீ மந்திரவாதி என்றே கூறுதல் வேண்டும். அவன் இப்பூவுலகில் உள்ளவர்கள் போற்றுமாறு வராகி,துர்கை, தேவி, அம்மன் ஆகியோருக்கு விதம் விதமாக பல நல்பூசைகளைச் செய்வன் என்றும் போக முனிவரது பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.

Moon, 12th-5th House in one place

செப்புவாய் சந்திரனும் ஈராறோனும் சிவசிவா பஞ்சமத்தோன் மூவர்சேர்ந்து அப்புவாய் ஆகாசங் கோபுரத்தில் அப்பனே கம்பத்தைக் கட்டித்தானும் ஒப்புவாய் உலகத்தோர் மதிமயங்க ஓகோகோ ஆகாச கரணம்போட்டு தப்புவாய் தரணி தனில் கீழேவந்து தார்வேந்தர் மனமகிழ பணிவன்பாரே. புகழ் பெற்ற சந்திரனும் இலக்கினத்திற்குப் ப்ன்னிரண்டுக் குடையவனும் சிவ பரம்பொருளின் பேரருட் கருணையினால் ஐந்தாமிடத்தோனும் ஆகிய இவர்கள் மூவரும் சேர்ந்து நிற்க. இச்சாதகன்,நீர் மீதும், ஆகாச மீதும், கோபுரத்தின் மீதும் கம்பங்களை நாட்டி அதன் மீதிலும் உலகோர் ஒப்பும்படியாக, அவர்களது மதியானது மயக்கமுறும்படியாக ஆகாசத்தில் கரணம் இட்டு வேடிக்கை காட்டி பூமியின் கீழ்வந்து மன்னர் முதலான மற்றையோரின் பரிசில்களைப் பெற்று மகிழ்வான் என்று போகமாமுனிவரது பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.

ஆறுக்குடையனும் இலக்கினத்ததிபனும்

பகருவாய் ஆறோனும் லெக்கனாதி பன்னிரெண்டெட்டாறில் தீயரோடே இகருவாய் தேகமது ஜென்மனுக்கு இளைத்து விடும்ரோகங்கள் கிட்டும்கிட்டும் புகழுகின்ற அரவொடு ரெண்டோன் கூடி பூங்குழலே ரெண்டதனி லமர்ந்து நிற்க நிகழுகின்ற நீணிலத்தில் கல்வியாலே நாலுவித பிரசங்க வித்வானாமே இன்னுமொன்றுரைப்பேன் கேட்பாயாக ஆறுக்குடையனும் இலக்கினத்ததிபனும் 12,8,6 ஆகிய இல்லங்களில் தீயோரோடு இருக்கப் பிறந்த ஜென்மனுக்கு தேகத்தில் இளைப்பு உண்டாகும். அநேக வியாதிகள் வந்து வாய்க்கும். எல்லாரும் புகழும் அரவுடன் இரண்டுக்குடையவன் கூடி இரண்டாம் இடத்திலேயே நிற்க இந்நிலவுலகில் அச்சாதகன் தான் பெற்ற கல்வியின் நிமித்தமாக மிகச் சிறந்த வித்துவானாகவும் பிரசங்கியாகவும் மிளிர்வான் என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

Sun Mercury Mars

தானென்ற இரவிக்கு முன்னேபுந்தி தனித்திருக்கப் புனிதனடா தரித்திரத்தோஷம் தானென்ற யிரவிக்குப் பின்னேபுந்தி தரணிதனில் பேர் விளங்கும் தனமுள்ளோன் தானென்ற யிரவிக்குப் பின்னேசேயும் தங்கிடவே புத்திரர்கள் மெத்தவுண்டாம் தானென்ற குருவோடு நீலன்மேவ தரணிதனில் செவிடனடா முடவன்பாரே. தன்னிகரில்லாத ரவிக்கு புதன் முன்னே தனித்திருக்க அவன் புனிதனேயாவான். ஆனால் தரித்திர யோகம் கொண்டவனே. ஆனால் ரவிக்குப் பின்னால் புதன் நிற்பின் அச்சாதகன் பெயர் பூமியில் விளக்கமுறக் காணும். அவன் தனவானேயாவான். அதேபோல் ரவிக்குப் பின்னே செவ்வாய் நிற்க அச்சாதகனுக்குப் புத்திரர்கள் மெத்தவும் உண்டு. மற்றும், குருவோடு நீலனும் அவ்வாறு மேவ அச்சாதகன் செவிடனாகவும் முடவனாகவும் இருப்பான் என்று போகரது அருளாணையாலே புலிப்பாணி கூறினேன்.

சூரியனுக்குப் பின்னால் சனிபகவான் நின்றால் Saturn before Sun

அரைந்திட்டே னின்னமொன்று செப்பக்கேளு
அனலனுக்குப் பின்னாலே அலரிமந்தன்
பரிரைந்திட்டேன் பண்டுபொருள் அகமிங்கிட்டும்
பார்தனிலேபர தார விசையநப்பா குரைத்திட்டேன் குமரனுக்கு எட்டுபத்தில் குலவையிட்டு வருவனடா சண்டன்தானும் சிறந்திட்டேன் ஜென்மனுக்கு யோவஞ்செப்பு சிறப்பாகப் புலிப்பாணி ஆசிச்சேனே.


 இன்னொரு விவரத்தையும் உனக்குக் கூறுகிறேன். அதை மனங்கொண்டு கேட்பாயாக! அனலன் என்று சொல்லப்படும் சூரியனுக்குப் பின்னால் தாமரையை மலர்த்தும் அவனது குமாரனான மந்தன் என அழைக்கப்படும் சனிபகவான் நின்றால் அச்சாதகனுக்கு பூர்வீக சொத்தும் நல்ல மனையும் கிடைக்கும். அவன் இந்நிலவுகில் பரதார இச்சை கொண்டவனாக இருப்பான் என்றும் அவனது எண்பதாவது வயதில் எமதூதனாகிய சண்டன் வருவானென்றும் ஆயினும் அவன் யோகவானேயென்றும் போகர் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

ascendent in scorpion





தெரிவித்தேன் தேளினில்லம் சென்மந்தோன்ற
செழுமதியும் கோணத்தில் சேரநன்று
அறிவித்தேன் அகம்பொருளும் அடிமைசெம்பொன்
அப்பனே கிடைக்குமடா அவனிவாழ்வன்
அறிவித்தேன் கேந்திரமும் கூடாதப்பா
மறையவனே கொடும்பலனை குறித்துச்சொல்லும்
தெரிவித்தேன் போகருட கடாக்ஷத்தாலே
தேர்ந்து நீபுலிப்பாணி நூலைப்பாரே



 தேள்சின்னம் கொண்டவிருச்சிக இலக்கினத்தில் பிறந்தோனுக்கு
 நன்மை செய்யத்தக்க சந்திர பகவான் திரிகோணத்தில் அமைவது
 நற்பலன்களை வாரி வழங்கும். இதனை உனக்கு நன்கு அறிவுறுத்துகிறேன்.
 நல்ல வீடு அமைதலும் தனலாபம் பல்கிப் பெருகுதலும்,
 அடிமைகள் வாய்த்தலும் சீரிய பொன்னாபரண சேர்க்கையும்
 அவனுக்குக் கிடைத்து இந்த பூமியில் வெகு புகழுடன் வாழ்வான்.
 ஆனால் 1,4,7,10 ஆகிய கேந்திரஸ்தானத்தில்
 அவன் வீற்றிருப்பின் இதற்கு நேர்மாறான பலன்களை நீ கூறவும்.
 இதையும் என் குருவான போகரது கடாட்சத்தாலேயே நான் குறித்துச் சொல்கிறேன்.
 நன்றாக ஆய்ந்தறிந்து என் நூலின் சிறப்பினை உணர்ந்து கொள்க. [எ-று] 

தீய கோள்கள் 4th house und 4th Lord in kendra

குறித்திட்டே னின்ன மொன்று கூறக்கேளு
குற்றமுள்ளோர் நான்கதனி லமைந்தவாறும் 
அரித்திட்டே னத்தலத்தோன் கேந்திரிக்க
அமடுவந்து தீருமடா அகமுமுள்ளோன்
சிரித்திட்டேன் ஜென்மனுக்கு வாகனங்களுண்டு
சிறப்பாக மேதினியில் நலமாய் வாழ்வன்
பரித்திட்டேன் பெற்றவட்கு ரோகஞ்சொன்னேன்
பரமகுரு பதியமர யோகந்தானே நான் இன்னுமொன்றையும் குறித்துச் சொல்கிறேன் நன்கு கேட்பாயாக!





தீய கோள்கள் நான்கில் அமைந்த முறையும் அந்த நான்காம் தலத்திற்கு உரியவன் கேந்திரத்திலிருப்பின் அதாவது 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க துன்பம் வந்து தீரும் என்பது சுருதி முடிவாகும். ஆயினும் நல்லமனை அவனுக்கு வாய்க்கும்; வாகன வசதியுடையவன். இந்நிலவுலகில் மேலான பெருமையுடன் வாழ்வான். ஆயினும் பெற்றோருக்கு வியாதியும் உண்டு என்பதை போகமா முனிவரின் பேரருளால் நான் கூறினேன் என்று புலிப்பாணி குறிப்பிடுவதோடு இலக்கினாதிபதி குருவுடன் சேர நன்றாம் என்று கூறுகிறார்.