பாரப்பா யின்னமொரு புதுமைகேளு
பால்மதிக்கு நாலோனும் சுங்கன் கூடில்
கூரப்பா யெத்தடத்தில் கூடிட்டாலும்,
கொற்றவனே ஜென்மனுமோ மந்திரவாதி
வீரப்பா வராகிதுர்க்கை தேவி அம்மன்
விதமான பூசைதனை மண்ணோர் போற்ற
சீரப்பா போகருட கடாட்சத்தாலே
செப்பினேன் புலிப்பாணி செயலைத்தானே.
நன்றாகக் கூர்மையாக இக்கருத்தையும் மனத்துள் கொள்க! இது புதுமையானதொன்றேயாகும். சந்திரன் நின்ற இடத்திற்கு நாலாம் இடத்திற்குரியவனும் சுக்கிரனும் கூடினால் அதாவது எவ்விடத்தில் கூடினாலும் அச்சென்மனை நீ மந்திரவாதி என்றே கூறுதல் வேண்டும். அவன் இப்பூவுலகில் உள்ளவர்கள் போற்றுமாறு வராகி,துர்கை, தேவி, அம்மன் ஆகியோருக்கு விதம் விதமாக பல நல்பூசைகளைச் செய்வன் என்றும் போக முனிவரது பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen