பாரப்பா யின்ன மொன்று பகரக்கேளு
பகலவனும் கலை மதியும் கோணமேற
சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும்
செல்வனுக்கே வேட்டலுண்டு கிரகமுண்டு
ஆரப்பா அமடுபய மில்லையில்லை
அர்த்தராத் திரிதனிலே சப்தம்கேட்பன்
கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில்
கூற்றுவனார் வருங்குறியை குறிப்பாய் சொல்லே
இன்னுமொரு முக்கியமான செய்தியினையும் நான் கூறுகிறேன். இதனையும் நீ நன்குணர்ந்து ஆராய்ச்சி அறிவுடன் கொள்வாயாக! பிரசித்தி பெற்ற சூரிய பகவானுக்கு திரிகோண ஸ்தானத்தில் (1,5,9 ஆகிய இடங்களில்) அமிர்த கலையுள்ள சந்திரன் பலமுற்ற அச்சாதகனுக்கு பலவிதத்தாலும் செல்வங்கள் சேருமென்றாலும், அரிஷ்டமும் உண்டு. எனினும் காக்கும் கோள் உண்டாதலின் அதனால் குறையொன்றும் இல்லவே இல்லை. நடு நிசியில் சப்தங்களைக் கேட்பவானாக இருப்பான். அச்சாதகனுக்கு 78-ஆம் வயதில் கூற்றுவனார் வருவார் என்பதனை ஏனைய கிரகங்களையும் எண்ணி உன் குறிப்பைச் சொல்வாயாக.
கேளப்பா இன்னமொரு புதுமைகேளு
கெடுதிசெய்யும் செம்பாம்பு நாலில்நிற்க
சீளப்பா ஜெனித்தமனை சுத்தபாழாம்
சென்மனுக்கு கிரகமுண்டு விதியும்கூறு
கூளப்பா குளிகனுமோ சேர்ந்து நிற்க
குடியிருக்கக் குச்சில்லை கறவையில்லை
ஆளப்பா அன்னைக்கு தோஷம் தோஷம்
அத்திடலில் அரவுக்கு சாந்திசெய்யே
அப்பனே இன்னுமொருபுதுமையினையும் கூறுகிறேன். அதனையும் நன்கு உணர்ந்து கேட்பாயாக! தீமையையே செய்யும் செம்பாம்பு எனக் கூறப்படும் கேது பகவான் நான்காம் இடத்தில் நிற்க அந்த சென்மன் உதித்த மனைபாழாகிப் போகும். அவனுக்கு தீக்கோள் தோஷமுண்டு. அவனது விதியையும் கிரகபலம் அறிந்து கூறுக. அவனுடன் மாந்தியும் கூடிநிற்பின் குடியிருக்க வீடோ கன்று காலிகளோ அவனுக்கில்லை. அவனது அன்னைக்கும் தோஷம் உண்டாம் என்று கூறுவதுடன் நாக தோஷப் பரிகாரம் செய்வது சிறப்பாமென்று போகமா முனிவரது பேரருளினால் புலிப்பாணி கூறினேன்.
செய்யப்பா யின்னமொரு சேதிகேளு
செயலாக நிதிகரும னிருவர்கூடி
கையப்பா கண்ணுற்று நோக்கினாலும் கனமுள்ளோ ரிருவருமே மாறினாலும்
அய்யப்பா அகம்பொருளும் நிலமுஞ்செம்பொன்
அப்பனே கிட்டுமடா ஜென்மனுக்கு
உய்யப்பா போகருடா கடாசத்தாலே
உத்தமனே புலிப்பாணி உரைத்தோம்னமே
சீர்த்தி மிகுந்தவனே, நீ இன்னுமொரு சேதியினையும் கேட்பாயக! இரண்டிற்குடையவனும் பத்துக்குடையவனும் கூடி இருப்பினும் அல்லது ஒருவரை ஒருவர் கண்ணுற்று நோக்கினாலும் அல்லது இவன் வீட்டில் அவனாக மாறி நிற்பினும் அச்சாதகனுக்கு அகமும், பொருளும், நிலமும், செம்பொன்னும் வெகுவாகக் கிடைக்கும். போகருடைய கடாட்சத்தால் உய்க என்றே அவருடைய மாணாக்கனாகிய புலிப்பாணி உரைத்தேன்.
அரைந்திட்டே னின்னமொரு சேதிகேளு
அப்பனே ஆறோனும் மூன்றோனின்மேல்
திரந்திட்டேன் தேசத்துக்குக் கள்ளர்நாட்டை
தீயாலேகொளுத்திடுவன் சினமுள்ளோன்
உரைத்திட்டேன் உள்நாட்டு கள்ளர்கண்டால்
உள்ளபடி ஆக்கினையை விதிப்பவன் கான்
பரைந்திட்டேன் படையாட்சி ஆள்கள்மெத்த
பன்பாக புலிப்பானி அரைந்திட்டேனே
இன்னுமொரு சேதினையும் நான் கூறுகிறேன் கேட்பாயாக! ஆறுக்குடையோனும் மூன்றுக்குடையோனும் கூடினால் அவன் மிகப் ¦ப்ரும் வீரனாக விளங்கினால் தீய கள்ளர்தம் தேசத்தைத் தீயாலே கொளுத்துகின்ற அளவுக்கு சினமுடைய வனாக இருப்பான். இன்னும் மறைமுக எதிரிகள் உண்டானால். அவர்களுக்கு முறைப்படி ஆக்கினைகள் விதிப்பான். இச்சென்மன் மிகப்பெரும் வீரனென்றும் குடி, படை கொண்டு செலுத்தத் தக்கவன் என்றும் இவனுக்கு நிறைந்த ஆள்பலம் உண்டென்றும் போகரது அருளால் புலிப்பாணி கூறினேன்.
`
பாரப்பா யின்னமொரு புதுமைகேளு
பால்மதிக்கு நாலோனும் சுங்கன் கூடில்
கூரப்பா யெத்தடத்தில் கூடிட்டாலும்,
கொற்றவனே ஜென்மனுமோ மந்திரவாதி
வீரப்பா வராகிதுர்க்கை தேவி அம்மன்
விதமான பூசைதனை மண்ணோர் போற்ற
சீரப்பா போகருட கடாட்சத்தாலே
செப்பினேன் புலிப்பாணி செயலைத்தானே.
நன்றாகக் கூர்மையாக இக்கருத்தையும் மனத்துள் கொள்க! இது புதுமையானதொன்றேயாகும். சந்திரன் நின்ற இடத்திற்கு நாலாம் இடத்திற்குரியவனும் சுக்கிரனும் கூடினால் அதாவது எவ்விடத்தில் கூடினாலும் அச்சென்மனை நீ மந்திரவாதி என்றே கூறுதல் வேண்டும். அவன் இப்பூவுலகில் உள்ளவர்கள் போற்றுமாறு வராகி,துர்கை, தேவி, அம்மன் ஆகியோருக்கு விதம் விதமாக பல நல்பூசைகளைச் செய்வன் என்றும் போக முனிவரது பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.
செப்புவாய் சந்திரனும் ஈராறோனும்
சிவசிவா பஞ்சமத்தோன் மூவர்சேர்ந்து
அப்புவாய் ஆகாசங் கோபுரத்தில்
அப்பனே கம்பத்தைக் கட்டித்தானும்
ஒப்புவாய் உலகத்தோர் மதிமயங்க
ஓகோகோ ஆகாச கரணம்போட்டு
தப்புவாய் தரணி தனில் கீழேவந்து
தார்வேந்தர் மனமகிழ பணிவன்பாரே.
புகழ் பெற்ற சந்திரனும் இலக்கினத்திற்குப் ப்ன்னிரண்டுக் குடையவனும் சிவ பரம்பொருளின் பேரருட் கருணையினால் ஐந்தாமிடத்தோனும் ஆகிய இவர்கள் மூவரும் சேர்ந்து நிற்க. இச்சாதகன்,நீர் மீதும், ஆகாச மீதும், கோபுரத்தின் மீதும் கம்பங்களை நாட்டி அதன் மீதிலும் உலகோர் ஒப்பும்படியாக, அவர்களது மதியானது மயக்கமுறும்படியாக ஆகாசத்தில் கரணம் இட்டு வேடிக்கை காட்டி பூமியின் கீழ்வந்து மன்னர் முதலான மற்றையோரின் பரிசில்களைப் பெற்று மகிழ்வான் என்று போகமாமுனிவரது பேரருட் கருணையால் புலிப்பாணி கூறினேன்.
இன்னொரு விவரத்தையும் உனக்குக் கூறுகிறேன். அதை மனங்கொண்டு கேட்பாயாக! அனலன் என்று சொல்லப்படும் சூரியனுக்குப் பின்னால் தாமரையை மலர்த்தும் அவனது குமாரனான மந்தன் என அழைக்கப்படும் சனிபகவான் நின்றால் அச்சாதகனுக்கு பூர்வீக சொத்தும் நல்ல மனையும் கிடைக்கும். அவன் இந்நிலவுகில் பரதார இச்சை கொண்டவனாக இருப்பான் என்றும் அவனது எண்பதாவது வயதில் எமதூதனாகிய சண்டன் வருவானென்றும் ஆயினும் அவன் யோகவானேயென்றும் போகர் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
தேள்சின்னம் கொண்டவிருச்சிக இலக்கினத்தில் பிறந்தோனுக்கு நன்மை செய்யத்தக்க சந்திர பகவான் திரிகோணத்தில் அமைவது நற்பலன்களை வாரி வழங்கும். இதனை உனக்கு நன்கு அறிவுறுத்துகிறேன். நல்ல வீடு அமைதலும் தனலாபம் பல்கிப் பெருகுதலும், அடிமைகள் வாய்த்தலும் சீரிய பொன்னாபரண சேர்க்கையும் அவனுக்குக் கிடைத்து இந்த பூமியில் வெகு புகழுடன் வாழ்வான். ஆனால் 1,4,7,10 ஆகிய கேந்திரஸ்தானத்தில் அவன் வீற்றிருப்பின் இதற்கு நேர்மாறான பலன்களை நீ கூறவும். இதையும் என் குருவான போகரது கடாட்சத்தாலேயே நான் குறித்துச் சொல்கிறேன். நன்றாக ஆய்ந்தறிந்து என் நூலின் சிறப்பினை உணர்ந்து கொள்க. [எ-று]
தீய கோள்கள் நான்கில் அமைந்த முறையும் அந்த நான்காம் தலத்திற்கு உரியவன் கேந்திரத்திலிருப்பின் அதாவது 1,4,7,10 ஆகிய இடங்களில் இருக்க துன்பம் வந்து தீரும் என்பது சுருதி முடிவாகும். ஆயினும் நல்லமனை அவனுக்கு வாய்க்கும்; வாகன வசதியுடையவன். இந்நிலவுலகில் மேலான பெருமையுடன் வாழ்வான். ஆயினும் பெற்றோருக்கு வியாதியும் உண்டு என்பதை போகமா முனிவரின் பேரருளால் நான் கூறினேன் என்று புலிப்பாணி குறிப்பிடுவதோடு இலக்கினாதிபதி குருவுடன் சேர நன்றாம் என்று கூறுகிறார்.