Freitag, 12. Oktober 2012

4 th house and 10th lord-நான்காம் இடத்தோனுடன் பத்தாமிடத்ததிபதியான

சூடப்பா யின்னமொன்று செப்புக்கேளு
சுகமுள்ள நாலோனைக் கருமன் கூடில்
கூடப்பா கோவில் திருப்பணிகள் செய்வன்
கொற்றவனே வாகனமும் செம்பொன் கிட்டும்
வீடப்பா வெள்ளிக்கு அம்மன் துர்க்கா
விதமான புந்திக்கு அய்யன்மாவோன்
பாடப்பா பவும னுக்கு சுப்பிரமணியம்
பரமென்ற சிவனுக்கு பொன்னன் கூரே




இன்னமொரு கருத்தையும் கூறுகிறேன் கவனமாகக் கேட்பாயாக! சுகஸ்தானாதிபதியாகிய நான்காம் இடத்தோனுடன் பத்தாமிடத்ததிபதியான கருமன் கூட அச்சென்மன் கோயில் திருப்பணிகள் புரிபவனாவான். அவனுக்குச் சிறந்த வாகனங்களும் செம்பொன்னும் கிடைக்கும். இலக்கினாதிபதி சுக்கிரனாகில் துர்க்கையம்மனுக்கும் புதனாகில் ஐயனார். திருமால் ஆகியோருக்கும் செவ்வாயாகில் சுப்பிரமணியருக்கும் குருவாகில் பரமசிவனுக்கும் கோவில் திருப்பணி செய்வான் என்று கூறுக.

Sonntag, 7. Oktober 2012

பிதுருக்குக்கண்டம்

பாரப்பா யின்னமொரு புதுமைகேளு பகலவனுஞ் சனியோடு பாம்புசேர கூரப்பா குமரனவ னுதிக்குமுன்னே கொற்றவனே பிதுருக்கு கண்டஞ்சொல்லு ஆரப்பா அத்தலத்தோன் சுபனைக்கூடி அப்பனே கண்ணுற்று நோக்கினாலும் சீரப்பா சிலகாலம் பிதுரிருந்து சிவலோக மடைவனடா செயலைக்கூறே. இன்னுமொரு புதுமையான செய்தியினையும் கூறுகிறேன். அதனையும் நன்கு கேட்பாயாக! சூரியபகவானும், சனியும், பாம்பும் சேர்ந்து நிற்க உதிக்கும் ஜென்மன் பிறப்பதற்கு முன்னமேயே பிதுருக்குக் கண்டம் ஏற்படும். ஆனாலும் அவர்கள் நின்ற அத்தலத்திற்குரியோன் சுபரைக் கூடினும் அல்லது சுபரது பார்வை பெறினும் சீரே ஏற்படும். எவ்வாறெனில் பிதுகர்கள் சில காலம் இருந்து பின்னர் சிவலோகமடைவர் என்பதே அது என்பதனை போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன். 

நேத்திரஊனம்

பாடுவாய் பதியோனும் ரெண்டோன்கூடில் பகருகின்ற அசுரகுரு பெலத்துநிற்க கூடுவாய் குழவிக்கு நேத்திர ஊனம் கொற்றவனே மாந்தியுமே கூடிநிற்க தேடுவாய் ஜென்மனவ னுதிக்கும் போது திடமாகச் செப்புவாய் நேத்திரமில்லை ஆடுவாய் போகருட கடாட்சத்தாலே அப்பனே புலிப்பாணி அறிவித்தேனே. நான் கூறுவதை நீ நலமாகப் பாடுவாயாக! இலக்கினாதிபதியும் இரண்டுக்குடையவனைக் கூட எல்லாராலும் குறிக்கப்பெறும் அசுரகுருவான சுக்ராச்சாரியார் பலமாய் நிற்க அச்சென்மனுக்கு நேத்திர ஊனம் உண்டென்றும் அவர்களோடு மாந்தியும் கூடி நிற்க நேத்திரமே இல்லை யென்றும் சற்குருவான போக முனிவரின் அருளாணையால் புலிப்பாணி கூறும் கருத்தைப் புகலுவாயாக.

Parivarththanai yoga பரிவர்த்தனை

தானென்ற கோள்களது மாரிநிற்க தரணிதனில் பேர்விளங்குந் தனமுமுள்ளோன் ஊனென்ற உடல் நாதன் பாம்புகூடில் உத்தமனாம் யோக்கியனாம் புனிதன் சேயன் கோனென்ற குமரியுட பூசைசெய்து கொற்றவனே குவலயத்தில் வாழ்ந்திருப்பான் வானென்ற ,மறலிபய மில்லையில்லை மைந்தனேவிட மறிந்து வழுத்துவாயே நவகோள்களில் இராகு கேது நீங்கலாக ஏனையவை தங்களுக்குள் இடம் மாறி (பரிவர்த்தனை) நிற்க, அச்சாதகனுக்கு பூமியில் பேரும் புகழும் மிகும். வெகுதனமும் உடையவனேயாவான். உடல் நாதனான சந்திரனுடன் பாம்பு கூடினும் உத்தமனாகவும், யோக்கியனாகவும், புனிதத் தன்மையுடையவனாகவும் அச்செல்வன் இந்நிலவுலகில் வாழ்ந்திருப்பான். அவனுக்கு எமபயம் இல்லவே இல்லை. இதனை ஏனைய கிரக நிலவரங்களையும் நன்கறிந்து கூறுவாயாக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.  


தரித்திர யோகம்
 தரித்திர யோகம். இது ஒரு அவயோகம்.
 பொருள் இல்லாத, கையில் காசு இல்லாத, அன்றாடம் பணத்திற்கு அல்லாடும் நிலைமையை, தரித்திர நிலைமை என்று வைத்துக் கொள்ளலாம். வேறு விதமான தரித்திரங்களும் உள்ளன. ஆனால் அவற்றை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு, திருமணமானவர்களுக்கு, அனுசரனையான மனைவி இல்லை என்றால், அதுவும் தரித்திர நிலைமைதான். சோம்பேறியான கணவன் அல்லது மனைவி வாழ்க்கைக்குத் தரித்திரமானவர்களே!
யோகத்தின் அமைப்பு: பலவிதமான அமைப்புக்கள் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று இருந்தாலும் இந்த யோகம் உண்டு. மனிதனை அல்லாட வைக்கும் கிரக அமைப்புக்கள்:
1. குரு 8ஆம் வீட்டு அதிபதியாக இருந்து, ஜாதகத்தில் லக்கினாதிபதியும், ஒன்பதாம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் வலிமையின்றிக் கெட்டிருப்பது, இந்த யோகத்தை உண்டாக்கும்
2. குரு, செவ்வாய், சனி, புதன் ஆகிய நான்கு கிரகங்களும் நீசம் பெற்று அல்லது அஸ்தமனமாகி 5,6,8,11,12ஆம் வீடுகளில் அம்ர்ந்திருக்கும் நிலைப்பாடு இந்த யோகத்தை உண்டாக்கும்.
3. ஒன்பதில் சனி இருந்து மற்றொரு தீய கிரகத்தின் பார்வையைப் பெறுவதும், லக்கினத்தில் சூரியனும், புதனும் கூட்டாக இருந்து, நவாம்ச லக்கினம் மீனமாக இருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும்
4. குரு, புதன், சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் 8,6,12,ஆம் வீடுகளில் இருப்பதும், 12ஆம் வீட்டதிபதி சூரியனின் பார்வையைப் பெறுவதும் இந்த யோகத்தை உண்டாக்கும்
5. வலிமை குன்றிய சுக்கிரன், குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 1,10,11,6,7,8 ஆகிய வீடுகளில் அமர்ந்திருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும்
6. நீசம் பெற்ற சுக்கிரன் லக்கினத்தில் இருந்து, (கன்னி லக்கினத்திற்கு மட்டும் அது சாத்தியம்) ஜாதகத்தில் குரு, சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் நீசம் பெற்றிருக்கும் நிலை இந்த யோகத்தை உண்டாக்கும்!
7. நவாம்ச லக்கினம், சனி, மற்றும் வலிமை குன்றிய குருவின் பார்வையில் இருப்பது இந்த யோகத்தை உண்டாக்கும்
8. குரு ஜாதகத்தில் 6 அல்லது 8ஆம் வீட்டில் இருந்து, குருவிற்கு அந்த இடம் ஆட்சி அல்லது உச்ச வீடாக இல்லாமல் இருக்கும் நிலை இந்த யோகத்தை உண்டாக்கும்
9. லக்கினம் ஸ்திர ராசியாக இருந்து, கேந்திர கோணங்களில் தீய கிரகங்கள் வலுவாக இருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும்
10. இரவு நேரப்பிறப்பாக இருந்து, ஜாதகனின் கேந்திர கோணங்களில் நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் வலிமை இழந்து இருக்கும் நிலைமை இந்த யோகத்தை உண்டாக்கும் இந்தத் தரித்திர அமைப்புள்ள ஜாதகனின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். அதிர்ஷ்டமில்லாமல் பல முயற்சிகளைச் செய்து கொண்டே இருக்க நேரிடும். வாழ்க்கை பலவிதங்களில் அவதியாக இருக்கும்.சமூகத்தில் உரிய மதிப்பு இருக்காது. எதிர்பாராத தோல்விகளைச் சந்திக்க நேரிடும்.
துருதுரா யோகம்
யோகம் : அனபா சுனபா யோகங்கள் இரண்டும் இருந்தால் துருதுராயோகம் என்பது அனபயோகமும் சுனபயோகமும் ஒரு ஜாதகத்தில் ஒருங்கே அமைந்தால் உண்டாகும். உங்களுக்கு இந்தயோகம் இருப்பதால் நீங்கள் ஆஸ்திகள் உடையவராய் இருப்பீர்கள். எப்பொழுதும் உங்கள் கைவசம் பணம் இருந்து கொண்டே இருக்கும். இது உங்களுடைய இயற்கையான இரக்கத்தன்மையையும் பெருந்தன்மையையும் கெடுக்காது. புகழ் உங்களை அரவணைக்கும். வாகனயோகங்கள் உண்டாகும்.
துவஜ யோகம்
துவஜ யோகம்! துவஜ எனும் வடமொழிச் சொல்லிற்குக் கொடி (flag) என்று பெயர். கொடி யோகம் என்று இதனை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். கொடி யோகம் என்றால் கொடி பிடித்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாகப் போகும் யோகம் அல்ல! கொடியை உருவாக்கித் தலைமை தாங்கும் அல்லது தலைமை ஏற்கும் யோகம். இந்த யோகத்துடன் ஒரு குழந்தை பிறந்தால், நாட்டிற்குத் தலைமை தாங்கும் யோகத்துடன் அந்தக் குழந்தை பிறந்துள்ளது என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். தலைமை தாங்குவது என்பது எந்த அளவிற்கு (Level) வேண்டுமென்றாலும், ஜாதகத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்து இருக்கலாம்.
யோகத்தின் அமைப்பு: ஜாதகத்தில், தீய கிரகங்கள் எல்லாம் எட்டாம் வீட்டில் இருக்க, சுபக்கிரகங்கள் எல்லாம் லக்கினத்தில் இருக்க வேண்டும். தீய கிரகங்கள்: செவ்வாய், சனி, ராகு அல்லது கேது சுபக்கிரகங்கள்: குரு, சுக்கிரன், சந்திரன் பலன்: ஜாதகன் தலைவனாக இருப்பான். அவன் உத்தரவை நிறைவேற்றப் பலர் காத்துக்கொண்டிருப்பார்கள். A planetary combination formed by all the malefic placed in the 8th house and all benefices in the ascendant. Under this combination, a leader is born
துஷ்கிரிதியோகம்
அவயோகம் துஷ்கிரிதியோகம்: 7ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும். பலன்: மனைவியை விட்டு பிரிந்து வாழ நேரிடும். சிலர் அடுத்தவருடைய மனைவியின் மேல் ஆசைவைத்து, தகாத செயல்களைச் செய்து கொண்டிருப்பார்கள். ஊர் சுற்றிகள் பலராலும் ஒதுக்கித் தள்ளப்படும் நிலைக்கு ஆளாக நேரிடும். பால்வினை நோய்கள் உண்டாகும். இவற்றின் விளைவாக உறவுகளின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடுவதுடன் வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாததாக மாறிவிடும்.
தேவேந்திர யோகம்
தேவேந்திர யோகம் தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்த தேவேந்திரனுக்குச் சமமாக விளங்கக்கூடிய யோகத்தைக் கொடுக்கும் ஜாதக அமைப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்திர ராசிகள் (Fixed signs) 1. ரிஷபம் (Taurus), 2. சிம்மம் (Leo), 3. விருச்சிகம் (Scorpio) 4. கும்பம் (Aquarius) ஆக இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த யோகம் இருக்கலாம்! ”சார், எனக்கு ராசியில், இந்த லக்கின அமைப்பு இல்லை, நவாம்சத்தில் இருக்கிறது பரவாயில்லையா?” பரவாயில்லை, உங்களுக்கும் இருக்கலாம். மேலே படியுங்கள். உங்கள் மனைவிக்கு இந்த அமைப்பு இருந்தாலும் நல்லதுதான். அவரை அனுசரித்துப் போனால், நீங்களும் அவர் தயவால் இந்த யோகத்தின் பலனை (நன்றாகக் கவனிக்கவும் அவர் தயவால்) அனுபவிக்கலாம்
யோகத்தின் பலன் என்ன? 1. ஜாதகன் அதீத அழகுடன் அல்லது அடுத்தவரைக் கவரும்படியான அழகுடன் இருப்பான்.(Handsome) 2. அழகான பெண்களின் கடைக்கண் பார்வைக்கு ஆளாவான். 3. ஏகப்பட்ட சொத்துக்கள், வீடுகள், வாசல்கள், நிலங்கள் என்று பெரிய செல்வந்தனாக இருப்பான் (Blog படிக்க நேரம் இருக்குமா?) 4. சமூகத்தில், நாட்டில் பெரிய அந்தஸ்துடன் இருப்பான்
யோகத்திற்கான அமைப்பு. 1. லக்கினம் ஸ்திர ராசியாக இருக்க வேண்டும் 2. லக்கினாதிபதி 11ல் இருக்க வேண்டும். 3. 11ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும் 4. 2ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் ஒருவர் வீட்டில் மற்றொருவர் என்று பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும் அதாவது இரண்டு பரிவர்த்தனைகள்: லக்கின அதிபதி + 11ஆம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரன் + 10ஆம் வீட்டுக்காரன் A planetary combination formed by Ascendant placed in a fixed sign, Ascendant lord in 11th, the lord of 11th in Ascendant, and the lords of 2nd and 10th houses in mutual exchange. This yoga is powerful in making the individual extremely beautiful, loved by pretty women, owner of vast wealth and villas. He attains a very high social status.


Samstag, 6. Oktober 2012

Second Lord in The Second House

தானேதா னின்ன மொன்று செப்பக்கேளு தயவாக தனபதியுந் தனத்திலேற கோனே தான் குமரனுக்கு தனமிருந்தும் குவலயத்திற் கெட்டியடா காசுயீயான் மானேதான் மக்கள் பெண்டிர் புஷ்டியாக மடிரொம்ப உண்ணாமல் பதனஞ்செய்வான் வீணேதான் போகருட கடாட்சத்தாலே விதமாக புலிப்பாணி உரைக்கக்கேளே நானே உனக்கு இன்னுமொன்றையும் கூறுகிறேன். அதனை கவனத்துடன் கேட்பாயாக! இரண்டுக்குடையவன் இரண்டாம் இடத்தில் அமர, அவன் அரச செல்வம் பெற்ற போதிலும் பூமியில் பணத்தை விரயம் செய்யாத கஞ்சனே ஆவான். தன்னுடைய பெண்டு பிள்ளைகளுக்குக்கூட பணம் ஈயான் என்பதோடு, உணவும் ஈயாது உலோபியாய் இருப்பான் என்றும் அவன் வீணான ஜன்மனே என்றும் போகரது அருளினால் புலிப்பாணி கூறினேன்.

Pulippani-திரராசி Taurus- Leo- Scorpio -Aquarius






பாரப்பா திரராசி செனித்தபேர்க்கு பாங்கான பாக்கியாதி பதியுமாகா கூறப்பா கோணத்தில் மேவினாலும் கொற்றவனே பலனளிப்பன் அரசன் லாபம் வீறப்பா மற்றயெடந் தனிலே நிற்க வெகுபயமாம் பலனில்லை வினையில் துன்பம் சீரப்பா போகருட கடாக்ஷத்தாலே சிறப்பாக புலிப்பாணி செப்பினேனே.

-விளக்க உரை- ஸ்திர ராசியில் தோன்றிய ஐன்மனுக்கு நன்மை செய்யும் பாக்கியாதிபதியான 9க்குடையவனும் தீமையே செய்வான். ஆனால் இப்பாக்கியாதிபதி திரிகோணமான (1,5,9 ஆகிய) பாவங்களில் நிற்பின் அரசனால் இலாபம் போன்ற நற்பலன்களை அளிப்பார். மற்ற இடங்களில் நின்றால் வெகுவான பயமே ஏற்படும். நற்பலன்கள் ஏற்படுவதில்லை. செய்கின்ற காரியத்தில் தொழிலில் விக்கினங்கள் உண்டாகும். சிறப்புமிக்க போக மகாமுனிவரான என் குருநாதர் அருளாணையால் புலிப்பாணியாகிய நான் இப்பலனைக் கூறினேன்.

pulippani-பன்னிரு ராசிகளுக்குள்ளே


சோதியென்ற குருபதியும் வெள்ளிநீலன்
சொலிக்கின்ற கதிர்மதிசேய் கணக்கன்பாம்பு
ஆதியென்ற ராசிபனி ரெண்டுக்குள்ளே
அடக்கிவைத்தார் கோள்களையும் ஆயன்தானும்
வாதியென் ஞானியும் பலவாறாக
வையகத்தில் பூட்டிவைத்தார் வரிசையாக
சாதகமாய் சென்மனுக்கு சுட்டிக்காட்டி
சமர்த்தாகப் பலன் சொல்லும் குறியைக்கேளே.

சோதிவடிவான குருவும், சுக்கிரன்,நீலனும் சனியும் ஒளி வீசுகின்ற சூரியனும்,சந்திரனும், செவ்வாய்க் கிரகமும், இன்னும் புதபகவானும் பாம்பிரண்டும் ஆகிய இந்த நவகோள்களையும் ராசிமண்டலமான பன்னிரு ராசிகளுக்குள்ளே அடக்கி வைத்தார் பேரொளிப்பிழம்பான இறைவன்.இது குறித்து வாதிட்டுக் கணித்த ஞானியர் பூவுலகில் வரிசைப்படுத்தி கூறிவைத்துள்ளார்கள். எனவே [ஒருவன் தன் ஜென்மஜாதகம் குறித்துக் கேட்க வருவானேல்] அவனுக்குச் சாதகத்தைக் கூறும் சமர்த்தான முறையினைக் கூறுகிறேன். எனது குறிப்பினை நன்கு உணர்ந்து கூறும் வகையைக் கேட்பாய்.

9 th house


ஆரப்பா அஞ்சுக்கு அஞ்சாம் வீட்டில் அப்பனே அசுபர்களும் அமர்ந்துநிற்க பாரப்பா பிதுருக்கு கண்டம் தெண்டம் பலமாக செப்புவாய் அரசர்தோஷம் சீரப்பா சுபர் நிற்க செல்வமுண்டு சிவசிவா பிதுருக்கு விதியும் தீர்க்கம் கூறப்பா குடிநாதன் கேந்திரகோணம் கொற்றவனே புலிப்பாணி குறித்திட்டேனே வேறொன்றையும் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு ஐந்துக்கு ஐந்தாம் வீட்டில் அதாவது ஒன்பதாம் இடத்தில் தீக்கோள்கள் அமர்ந்து நிற்க பிதுர்களுக்குக் கண்டமும் அதனால் பொருள் விரயமும் மிகுதியாக ஏற்படும். அரசர் முதலியோராலும் தோஷமே ஏற்படும். ஆனால் சுபர் நிற்பாரேயானால் செல்வமுண்டாகும். சிவபரம்பொருளின் பேரட் கருணையால் பிதுர்களுக்கு ஆயுளும் தீர்க்கமாகும். இலக்கினாதிபதி கேந்திர, திரிகோண ஸ்தானத்திலிருப்பினும் இதே பலன் என்பதையும் போகரருளாலே புலிப்பாணி கூறினேன்.





Planets on either side of 9th House

ஆச்சப்பா பத்தெட்டில் கோள்கள் நிற்க அப்பனே அவரவர்கள் பொசிப்புநாளில் கூச்சப்பா குழவியுட பிதுரைத்தேடி கொற்றவனே கண்டனுமே வருவான் கூறு மூச்சப்பா மேதினியில் செம்பொன்தேடி முகமினுக்கி மாதருடன் கூடிவாழ்வன் யேச்சப்பா போகருட கடாட்சத்தாலே இடமறிந்து நிலைகூர்ந்து இயம்புவாயே. மற்றுமொரு செய்தினையும் நீ கேட்பாயாக! இலக்கினத்தி’ற்குப் பத்தாம் இடம், எட்டாம் இடம் ஆகியவற்றில் கிரகங்கள் இருந்து அவரவர் தம்முடைய வாழ்நாளில் அச்சாதகனுடைய பிதுர்களைத் தேடி எமதூதனான சண்டன் வருவான் என்றும் கூறுவாயாக. அச்சாதகன் புவியில் நிறையச் செம்பொன்னைத் தேடிச் சேர்ப்பதோடு முகத்தை மினுக்கித் திரியும் வேசியரைக் கூடி வாழ்வான் என்று கிரக நிலவரத்தை நன்கு ஆராய்ந்து கூறுக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

சனிபகவான் சந்திரனுக்கு எட்டில் Sat in 8th from Moon

பரந்திட்டேனின்ன மொன்று பகரக்கேளு பானு மைந்தன் பால்மதிக்கு யெட்டில்நிற்க சிறந்திட்டேன் ஜென்மனுக்கு அனேகதுன்பம் செத்திறந்து போவதற்கு யெண்ணங்கொள்வன் அறைந்திட்டேன் அகம்பொருளும் நிலமும் நஷ்டம் அப்பனே அரசனிடம் தோஷமுண்டாம் குரைந்திட்டேன் குடிநாதன் கேந்தரிக்க குற்றமில்லை புலிப்பாணி கூறக்கேளே பரிவுடன் இன்னொரு கருத்தையும் நான் கூறுகிறேன். கேட்பாயாக! சூரிய புத்திரனான சனிபகவான் சந்திரனுக்கு எட்டில் நிற்க அனேக விதமான துன்பங்கள் ஏற்படும். அவன் தற்கொலை செய்து கொள்வதற்கும் எண்ணுவான். அவனது மனையும், பொருளும், நிலமும் நஷ்டமாகும். அது மட்டுமல்லாமல் அரசர்களது கோபத்திற்கும் ஆளாகும் தோஷமும் உண்டாகும். எனினும் லக்கினாதிபதி கேந்திரத்தில் இருக்கக் குற்றமில்லை என்றே போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.

Mittwoch, 3. Oktober 2012

கேந்திர தனஸ்தானத்திலேனும்

கேளப்பா மலை தனத்தில் சப்தகோள்கள் கெடி மெத்தமுடியரசு சீமானென்றேன் ஆளப்பா சேனைபரி வேடர் கூட்டம் அணியணியா யிருக்குமடா அலங்கஞ்சுத்தி நாளப்பா நவமணியும் பொருந்திநிற்கும் நலமான துரகங்கள் ரதங்களுள்ளோன் சூளப்பா போகருட கடாட்சத்தாலே சுகமாகப் புலிப்பாணி பகர்ந்தேன்பாரே. இன்னொரு கருத்தினையும் கூறுகிறேன். கேட்பாயாக! கேந்திர ஸ்தானத்திலேனும், இரண்டாமிடமான தனஸ்தானத்திலேனும் ஏழு கிரகங்கள் பொருந்தி நிற்பின் அச்சாதகன் அரச செல்வம் பெற்ற சீமானேயாவான். அவனுக்கு சேனைகளும், பரிக் கூட்டமும், வேடர் கூட்டமும் அணியாகத் திரண்டிருக்கும் என்பதோடு வைரம் முதலான நவமணிகளும் பொருந்தி நிற்பதுடன், நல்ல ரகக் குதிரைகளும் ரதங்களும் உடையவன் என்று போகமா முனிவரின் அருளாணைப்படி புலிப்பாணி கூறினேன்.

Ragu Ketu in 4,8,12 th house

நன்றாகப் பாம்புகள் தான் நாலிலேனும் நலமாக ஈராறும் இருநான்கேனும் சென்றிட்ட தீயர்பலர் செய்யாரப்பா திறமான நாலில் நின்றால் மாதர்தோஷம் குன்றிவிடும் யீராறில் பாதரோகம் குணமான இருநான்கில் கூறும்பாம்பால் நன்றாக மிகுபயமா மற்றராசி நலமென்றே புலிப்பாணி நவின்றிட்டேனே இராகு, கேது என்னும் பாம்புகள் இலக்கினத்திற்கு நான்கிலேனும் மற்றும் 12,8 ஆகிய இடங்களிலும் அமர்ந்தால் நற்பலன்களைச் செய்வார். நான்கில் நிற்பினும் மாதர்தோஷம் குறைவினைச் செய்யும். பன்னிரண்டாம் இடத்தில் நிற்க பாதரோகமும் அட்டம ஸ்தானமான எட்டாம் இடத்தில் நிற்க மிகுதியான பயமும் ஏற்படும்., பிற இராசிகள் நலமுடையதென்றே சற்குருவான போக மாமுனிவரின் அருளாணைப்படி புலிப்பாணி கூறினேன்.

Ragu in 8th House.

ஆரடா யின்னமொரு சேதிகேளு அட்டமத்தில் கருநாக மமைந்தவாறும் சீரடா செல்வனையும் அரவந்தீண்டி செத்திறந்து போய்மடிவன் செகத்திலேதான் பாரடா பரமகுரு வேந்தன் நோக்க படவரவு தீண்டாது பாலனைத்தான் ஊரடா உண்ணுதலால் கேடுமுண்டு உத்தமனே ஆறோனைக் கூர்ந்துசொல்லே 89 வேறொரு கருத்தினையும் உனக்குச் சொல்கிறேன். அந்தச்சேதினையும் நீ மனங்கொண்டு கேட்பாயாக! இலக்கினத்திற்கு எட்டாமிடத்தில் இராகுபகவான் நிற்க, அச்சாதகனை அரவந் தீண்டலால் அவனுக்கு மரணம் என்பது உறுதி செய்யப்பட்ட தொன்றாகும். ஆனால் பரம குருவான பிரகஸ்பதியானவர் அத்தானத்தை நோக்க பட அரவு தீண்டாது என்பதனையும் உணர்வதோடு உண்ணும் உணவினால் அவனுக்குக் கேடுண்டாம் என்று விதம் தெரிந்து கிரக பலம் உணர்ந்து கூறுவாயாக.

Sun & Venus 8th House


சொல்லப்பா சுடர்வெள்ளி யெட்டில்நிற்க சுகமான் கட்டில் மெத்தை மாடகூடம் அல்லப்பா அகம்பொருளும் நிலமுங்கிட்டும் அரண்மனையில் சேவகமும் செய்வன்காளை தள்ளப்பா தரைபொருளும் நிலமுமெல்லாம் தந்த சுக்கிரன் வாங்கிடுவன் பின்னால்கேடு வல்லப்பா போகருட கடாட்சத்தாலே வளமான புலிப்பாணி பாடினேனே மற்றொரு கருத்தையும் நீ மனத்திற் கொண்டு கருத்துடன் கூறுவாயாக! சூரியனும் சுக்கிரனும் இலக்கினத்திற்கு எட்டில் நிற்க அச்சாதகனுக்கு சுகமான, மெத்தை தழுவணை, கட்டில் மற்றும் மாடகூடம் உள்ள நன்மனையும் பொருளும் நிலமும் மிகவானதாகப் பெற்று மகிழ்வதுடன் அரண்மனையில் சேவகமும் புரிபவனாவான். எனினும் இவற்றையெல்லாம் நல்கிய சுக்கிரபகவான் நல்கியவண்ணமே மீண்டும் வாங்கிடுவான். அதனால் பின்னர் கேடு விளைவதும் உறுதியேயாகும். வல்லமைமிக்க சற்குருவான போகமுனிவரது அருளாணையாலே இதனை வளமாகப் புலிப்பாணி பாடினேன்.

Ragu or Ketu, Sat Mars Sun in 7th House

பாரப்பா யின்னமொரு புதுமைகேளு படவரவ சனிசெவ்வாய் வெய்யோனேழில் வாரப்பா வந்ததொரு தாரமெல்லாம் வையகத்தில் மாண்டிடுவர் வரிசையாக ஆரப்பா அட்டமத்தி லிவர்கள் நிற்க அப்பெண்ணின் கணவனோ முந்திசாவன் சீரப்பா போகருட கடாட்சத்தாலே சிறப்பாகப் புலிப்பாணி நூலைப்பாரே. இன்னொரு புதுமையான செய்தியினையும் நீ கேட்பாயாக! பட அரவும், சனியும், செவ்வாயும், சூரியனும் சேர்ந்து களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் அமர அச்சாதகனுக்கு வந்த தாரமெல்லாம் இப்பூமியிலே வரிசையாக மாண்டு போவார்கள். ஆனால் இவர்கள் அட்டமத்தில் அமர்ந்தார்களேயானால் அப்பெண்ணின் கணவனே (அதாவது சாதகன்) முன்னர் சாவான். இக்கருத்தையும் போகமுனிவரின் பேரருட் கருணையால் உனக்குச் சொன்னேன்.

8th Lord in 3rd place

அரைந்திட்டேன் இன்னமொன்று அன்பாய்க்கேளு அட்டமத்தோன் மூன்றினிலேயமர்ந்தவாறும் கரந்திட்டேன் கருவூரி லிருந்துவந்த காளையன் நூறாண்டு வசிப்பனப்பா பரைந்திட்டேன் பகைவர்களு மெதிர்த்தாரானால் பாலனுமே போர்புரிவன் நிதியுள்ளோன் கிரந்திட்டேன் போகருட கடாட்சத்தாலே சிறப்பான புலிப்பாணி சொன்னேன்பாரே. இன்னொரு விஷயத்தையும் நான் அன்புடனே கூறுகிறேன். அதனையும் நன்கு உணர்ந்து கேட்பாயாக. இலக்கினத்திற்கு எட்டுக்குடையவன் மூன்றாம் இடத்தில் அமர அவனுக்கு ஆயுள் நூறு என்க. இனி அவனுக்குப் பகைவர் ஏற்படின் அவன் அச்சமற்றவனாக வீரப்போர் புரிபவனாவான். மேலும் இவன் நிறைதனம் உடைய இரு நிதிக் கிழவனேயாவான். சற்குருவான போக மகா முனிவரின் அருளாசிபெற்ற புலிப்பாணி இதனை உனக்குச் சொன்னேன்.

அட்டமத்தில் ஆச்சி

பாரப்பா இன்னுமொன்று பகரக்கேளு பலமுள்ள அட்டமனு மட்டமத்தில் கூறப்பா குழவிக்கு ஆண்டுநூறு கொற்றவனே சத்துருவும் கூடிநோக்க ஆரப்பா அயன் விதியும் அற்பமாகும். அம்புலியும் உச்சகேந் திரத்தில் நிற்க சீரப்பா ஜென்மனுமே அம்பதுக்குள் சிவலோகஞ் சேர்வனென்று தெளிந்துசெப்பே. இன்னுமொரு நிலைமையும் உனக்குச் சொல்கிறேன். இதனையும் நன்கு உணர்வாயாக. இலக்கினத்திற்கு அட்டமாதிபத்தியம் பெற்ற கிரகமானது அட்டமத்தில் ஆச்சி பெறுமானால் அச்சென்மனுக்கு ஆயுள் நூறாகும். அதே சமயம் சத்துரு கிரகங் கூடி அட்டமாதிபதியைப் பார்ப்பின் அவன் விதி அற்பமானதேயாகும். சந்திரன் தனது உச்ச வீடான ரிஷபத்திலோ அல்லது அதேபோல இலக்கின கேந்திரமானதாக இருப்பின் அச்சென்மன் ஐம்பது அகவைக்குள் சிவலோகம் சேர்வான் என்று ஏனைய கிரக பலங்களையும் நன்கு ஆராய்ந்து கூறுவாயாக.

அட்டமன் விதி 1

கேளப்பா பீசத்தில் நோயுண்டாகும் கெதியுள்ள குழவிக்கு ரோகங்கிட்டும் வீளப்பா தொங்கிடுவன் வெகுபேர்காண விளங்குகின்ற தூக்குமரக் கோலில் தானும் பாரப்பா பீரங்கி வெடியால் கேடு பலதுன்பம் விளையுமடா பொருளும் நஷ்டம் நீளப்பா நீர்ப்பயமும் தீயால்வேதை நீரிடியும் விழுகுமடா நிசஞ்சொன்னோமே. அட்டமாதிபதியால் மேலும் ஏற்படும் துன்பங்களைக் கூறுவேன் கேட்பாயாக! பீசத்தில் நோய் உண்டாதலும், நற்கதியுள்ள குழவிக்கு பலவித ரோகங்கள் ஏற்படுதலும், பல பேரும் கண்டு அனுதாபப்படுமாறு தூக்கில் தொங்கி மரணமடைதலும், மற்றும் பீரங்கி முதலிய வெடிகளால் ஏற்படும் துன்பங்களும் போன்ற பலவும் ஏற்படுவதோடு அனேகப் பொருள் நஷ்டமும், ஜலத்தில் கண்டமுள்ளதாதலால் பயமும் தீயால் துன்பமும் நீரில் இடி விழுதலும் நேர்ந்து மிகத்துன்பம் உண்டாகும் என்பதையும் போகரது அருளாணையாலே புலிப்பாணி கூறினேன். 


அட்டமாதிபதி

பாரப்பா அட்டமனு மெவரானாலும் பலமுள்ளோர் அப்பலனை பணிந்துகேளு சீரப்பா சிறைமரணம் கிரிமேலேறி சிவசிவா வீழ்ந்திடுவன் தேசம் செல்வன் கூர்ப்பா கொடும்பகையும் கொடுவாள்காயம் குடிமண்ணுஞ் சீவனமும் மோசக்கேடு வீரப்பா விஷபயமும் அம்மைபேதி விளையுமடா பலதுன்பம் வினையைக்கேளே. இன்னொன்றையும் நீ நன்கு ஆராய்ச்சி பூர்வமாக கவனித்து உணர்க! இலக்கினத்திற்கு அட்டமாதிபதி எவரானாலும் பலமுள்ளவரே. அதன் பலனைப் பணிவுடன் கேட்பாயாக. அவனால் சிறைப்படுத்தலும், மரணம் வாய்த்தலும், மலைமேல் ஏறித் தவறிவிழுந்து இறத்தலும் பரதேசம் செல்வதும் மற்றும் கொடியபகையும், கொடுவாள் போன்ற ஆயுதங்களால் ரணமும், குடும்பத்திற்கும், பூமிக்கும் ஜீவனத்திற்கும் மோசமும் கேடு விளைத்தலும் மற்றும் விஷபயமும் மற்றும் கொள்ளை நோயான அம்மை, பேதி போன்ற பற்பல விதமான துன்பங்களைத் தரும் வினையும் நேரும் என உணருக.

கண்டம்: Mars, Sun & Ragu in 8th House.

சொல்லுகிறேன் இருநாலில் செவ்வாய்தோன்ற சூரியனா ரரவுடனே சேர்ந்துநிற்க வில்லவே விஷந்தீண்டி சாவான் சென்மம் விதமான் களத்திரத்தால் வேதைமெத்த நல்லவே லெக்கினேச னாராமாதி நஞ்சுள்ள கரும்பாம்பு சேர்ந்திட்டாலும் புல்லவே மருந்தாலே கண்டம்சொல்லு பூதலத்தில் புலிப்பாணி களறிட்டேனே. இன்னுமொன்றையும் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு எட்டில் செவ்வாய் நிற்க சூரியனோடு பாம்பும் சேர்ந்துநிற்க அச்சென்மன விஷம் தீண்டலால் உயிரிழப்பான். அவனுக்குக் களத்திரத்தாலும் துன்பமே. இன்னம் மெத்தவும் நல்லவனான இலக்கினாதிபதிக்கு ஆறாம் இடத்திற்குடையவன் நஞ்சுண்டு கரும்பாம்பான இராகுவுடன் கூடினாலும் மருந்தால் அச்சாதகனுக்குக் கண்டம் என்று கூறுவாயாக! இதனைப் போகமா முனிவர்¢ன் அருளாணையால் புலிப்பாணி நவின்றிட்டேன்

Moon & Venus in 7th House

ஆரப்பா யின்னமொரு புதுமைக்கேளு அம்புலியும் அசுரகுரு யேழில்நிற்க கூரப்பா கிழவனுக்கு மாலையிட்டு குமரியவள் மதனத்தால் பலரைக்கூடி சீரப்பா செல்வனையும் பெற்றெடுத்து சிறப்பாக தொட்டிவிட்டு ஆட்டுவாளாம் பாரப்பா பார்த்தவர்கள் பிரமிக்கத்தான் பாங்கியவன் ஸ்தனங்குலுங்க வருவாள்பாரே இன்னும் ஓர் அதியசயமான செய்தியையும் கூறுகிறேன். நன்கு ஆராய்ந்து கேட்பாயாக! சந்திரனும் அசுரகுருவான சுக்கிரனும் இலக்கினத்திற்கு ஏழில் நிற்க அச்சாதகி கிழவனுக்கு மாலையிட்டு அவனால் மனநிறைவு பெறாமல் காமவயப்பட்டு பலரையும் கூடி சிறப்பான புதல்வனையும் பெற்றெடுத்து அவனைத் தொட்டிலிலிட்டு ஊரார் வியக்க ஆட்டுவதோடு தனது ஸ்தனங்கள் குலுங்கப் பெருமையோடு வருவாள் என்பதையும் புலிப்பாணி உனக்கு உணர்த்தினேன்.

Jupiter Moon in 7th House. Me Ve in 4th. Venus ,Moon

பாரப்பா யின்னமொரு புதுமைகேளு பால்மதியும் பரமகுரு யேழில் நிற்க சீரப்பா ஜென்மனுக்கு வேட்டலில்லை செந்திருமால் தேவியுமோ விலகி நிற்பாள் கூரப்பா குமரியவளில்லாமல்தான் குமரனுட வங்கிஷமும் நாசமாச்சு ஆரப்பா அயன்விதியை கூறலுற்றேன் அப்பனே புலிப்பாணி பாடினேனே இன்னுமொரு புதுமையையும் நீ கேட்பாயாக! எல்லாராலும் புகழப்படும் குருவும் மதியும், ஏழாம் இடத்தில் நிற்கப் பிறந்த சாதகனுக்கு தன்னளவில் விருப்பமின்றி இருப்பான். எனினும் செந்திருமால் தன் தேவியுடன் அவனை விலகியே நிற்பான். ஆதலின் மனைவி மக்கள் இன்றி அக்குமரனது வம்சம் நாசமாகும்பிரமன் எழுதிய விதியை யாரால் மாற்ற இயலும்? இதனையும் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.




Mercury Venus in 4 th house ,Asc lord in quadrants (1, 4,7,10)


பாடுவாய் புந்தி வெள்ளி நாலில் நிற்க பகருகின்ற பதியோனும் கேந்திரமேற நாடுவாய் நாலுள்ளோன் சுபர்கள் நோக்க நற்சுகமும் மேடையுண்டு நாடுமுள்ளோன் கூடுவாய் குமரனுக்கு யோகம் மெத்த குவலயத்தில் பேர் விளங்கோன் நிதியுமுள்ளோன் ஆடிடுவாய் ஆரல் நிற்கும் நிலையைப்பார்த்து அப்பனே புவியோர்க்கு கூறுவீரே 



 மற்றொன்றையும் கூறுவேன், கேட்பாயாக! பெருமை மிகு புதனும் சுக்கிரனும் இலக்கினத்திற்கு நான்காம் இடத்தில் நிற்க இலக்கினாதிபதியும் கேந்திரத்தில் நின்றால் எல்லா சுகபோகமும் உள்ளவன், மேலும் சுபர்களின் திருஷ்டி பெற்றால் பெருமைமிகு சுகமும், உப்பரிகை மேடையும் நாடும் உள்ளவன், இச்சென்மனுக்கு இந்நிலவுலகில் மிகவும் யோகம் உண்டென்றும் இவன் பெயரும் புகழும் விளக்கம் பெறும் என்பதும் இவன் வெகுதனம் உடையவன் என்பதும் நிதர் சனமே. எனினும் சூரியன் நின்ற இடத்தை நன்கு ஆராய்ந்து கூறுவாயாக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி உரைத்தேன். 



 6th lord in quadrants

 ஆரப்பா யின்னமொரு சேதிகேளு அப்பனே ஆறோனும் கேந்திர கோணம் சீரப்பா ஜென்மனுக்கு இராஜ தோஷம் செப்புகிறேன் சோரர்பயம் சோரத்தால் துன்பம் கூரப்பா குடும்பத்தில் களவும் போகும் கூச்சலிட்டு வெளிவருவள் குமரிதானும் வீரப்பா விஷயமுநீ வெடியால் துன்பம் விளையுமடா பலதுன்பம் இன்னம்கேளே இன்னுமொரு கருத்தினையும் உனக்குக் கூறுகிறேன். அதனையும் நன்கு கவனிப்பாயாக! இலக்கினத்திற்கு 6க்குடையவன் கேந்திரஸ்தானத்தில் (1,4,7,10) இருந்தால் அச்சென்மனுக்கு அரசதோஷம் மற்றும் திருடர் பயம், சோரம் போவதால் துன்பம் விளைதல், குடும்பத்தில் களவு போதல், வீட்டில் சண்டையும், குமரிப்பெண் கூச்சலிட்டு வெளிவருதலும், விஷபயமும், வெடி முதலியவற்றால் துன்பமும் இன்னும் இது போன்ற பல துன்பங்களும் ஏற்படும் என்று போகரது ஆணையால் புலிப்பாணி புகன்றேன். 




Venus in 4th house


ஆரப்பா யின்னமொன்று அரையக்கேளு அப்பனே அசுரகுரு நாலிலேற சீரப்பா செழுமதியும் ஜென்மம் ஜென்மம் செல்வனுக்கு யோகங்கள் கூறக்கேளும் வாரப்பா வாகனங்கள் பூமியுள்ளோன் வளமான போகனடா வையகத்தில் கூறப்பா கொடுஞ்சனியும் பத்தில் நிற்க கூறுவாய் குழவிக்கு யோகங்கூறே வேறொரு விஷயத்தையும் உனக்கு விளக்கமாக உரைக்கின்றேன். அதனையும் நன்கு ஆய்ந்து கவனிப்பாயாக! அசுரர்களின் குருவென்று சொல்லக்கூடிய சுக்ராச்சாரியார் நான்காம் இடமான கேந்திரஸ்தானத்தில் நிற்க அச்சாதகனுக்கு யோகங்கள் மெத்தவும் உண்டாம். அவன் வாகன யோகம் உடையவன். பூமி லாபம் உடையவன். வளம் மிகுந்த போக பாக்கியங்களை அனுபவிப்பவன். இந்நிலவுலகில் சிறப்புறுபவன், இதேபோல் பத்தில் கொடிய பாவி எனக் கூறப்படும் சனிபகவான் நின்றாலும் அச்சென்மனுக்கு யோகம் என்றே கூறுவாயாக என போகர் அருள் பெற்ற புலிப்பாணி கூறினேன்.




Moon

ஆரப்பா யின்னமொன்று அரையக்கேளு அப்பனே அம்புலிக்கு ஆரே ழெட்டில் சீரப்பா சுபர் நிற்க ஜென்மன்தானும் சிறப்பாக மேதினியில் நலமாய்வாழ்வான் பூரப்பா பேய்பூதம் வசியமாகும் பூதத்தில் அரசனிடம் சேனைகாப்பன் கூரப்பா குடிநாதன் கெட்டானானால் குமரனுக்கு யோகங்கள் குலைந்துபோச்சே மேலும் ஒன்றைக் குறிப்பிடுகிறேன். அதனையும் நன்கு உணர்ந்து கேட்பாயாக! சந்திரனுக்கு ஆறு, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் நிற்கப் பிறந்த சாதகன் இப்பூமியில் மிகச் சிறப்பையே அடைகிறான். நலமுள்ள வாழ்வே பெறுகிறான். இவனுக்குப் பேய், பூதம் ஆகியவை வசியமாகும். மேலும் அரசசெல்வாக்கு பெறுவான். ஆனால் இலக்கினாதிபதி கெட்டால் இந்த யோகங்கள் குலையும் என்பதையும் கிரகநிலவரங்களை நன்கு ஆராய்ந்து கூறுவாயாக எனப் போகர் அருள் பெற்ற புலிப்பாணி கூறினேன்.












Venus and Mars in Leo

வீரப்பா யின்னமொரு புதுமைகேளு விளம்புகிறேன் வீரியன் வீட்டில்தானும் ஆரப்பா அசுரர்குரு செவ்வாய்கூடில் அப்பனே அமங்கலையை அணைந்துவாழ்வன் கூரப்பா குமரனுக்கு வித்தைபுத்தி குவலயத்தில் நிதியுண்டு சிப்பிநூல் பார்ப்பன் சீரப்பா போகருட கடாக்ஷத்தாலே சிறப்பாகப் புலிபாணி செப்பினேனே. வீரமிக்கவனே! இன்னுமொரு புதுமையினையும் நன்கு கேட்பாயாக. சூரியனது வீடான சிம்மத்தில் அசுர குருவான சுக்ராச்சாரியும் செவ்வாயும் கூடினால் அச்சாதகன் அமங்கலையை அணைந்து அவனுக்கு வித்தை புத்தி மிகுந்து இந்நிலவுலகில் நிதி மிகுந்தவனாய் சிற்ப சாத்திரத்தில் வல்லவனாய் நூலாராய்ச்சி உடையவனாவன் என எனது சற்குருவான போகமாமுனிவரது அருளாணையாலே புலிப்பாணி கூறினேன்.

Pulippani-சுக்ராச்சாரியார் Venus



பாரப்பா பனிரெண்டு மூன்றாரெட்டில்
பலமுள்ள அசுரகுரு அதனில் தோன்ற
வீரப்பாவிதிகுறைவுவெதர்நோய்வாதம்
விளங்குகின்ற செம்பொன்னும்மனையும் நஷ்டம்
கூறப்பா குழவிக்கு மகோதரமும் பாண்டு
கொற்றவனே குன்மமொடு சயமும்சோகை
சீரப்பா ஈராறில் சுங்கன் ஆட்சி
சிவசிவா சயனசுகம் யோகஞ்சொல்லே.
 -விளக்க உரை- ஒரு சாதகனுக்கு 12,3,6,8 ஆகிய இடங்களில் அசுர குருவான சுக்ராச்சாரியார் பலமுடன் சஞ்சாரம் செய்வாரானால்  அச்சாதகனுக்கு ஆயுள் குறைவதுடன், மர்ம உறுப்புகளில் [பீசத்தில்] நோயுறுதலும்,வாதநோய் ஏற்படுவதும் மிகவும் விளக்கம் பெற்ற செம்பொன் மற்றும் வாழ்மனையும் நஷ்டமாம். மேலும், மகோதரம்,பாண்டு ஆகிய நோய் மட்டுமல்லாமல் குன்மம், சயம், சோகை ஆகிய நோய்களும் ஏற்படும். ஆயினும் 12ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் சிவபரம்பொருளின் பேரருளால் சயன சுகமும் நல்ல யோகமும் ஏற்படும் எனக் கூறுவாயாக.   "